நேற்று செய்தித்தைளை பார்த்தவுடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. எனக்கு மட்டுமல்ல அந்த செய்தியைப் படித்த அனைவரின் நிலையும் அதுவாகத்தான் இருந்திருக்கும் என்பது என் தீர்க்கமான எண்ணம்.
அந்த செய்திதையைப் படித்த உடன் சம்மந்தப்பட்ட நபர்களை புழுவிலும் இழிந்தவர்களாகவே எனக்கு எண்ணத்தோன்றியது. உங்களுக்கும் இதே மனநிலை ஏற்பட்டு இருக்கலாம்.
விசயத்திற்கு வருவோம்.
“சரவணபவன் ஓட்டல் அதிபர் இராஜகோபால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரைக் கொன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்தது. மேற்படி வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இராஜகோபால் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் மேற்படி வழக்கில் தனியாக இராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று காவல் துறை மேல் முறையீடு செய்தது.”
இதுவரை நடந்த விசயங்கள் பெறும்பாலான வழக்குகளில் நடப்பவை தான். ஆனால் அதற்குப்பிறகு நடந்த சம்பவம் தான் சாதாரண மனிதர்களையும், ஏன் போலீசார் உட்பட மற்றத் துறைகளில் வேலை செய்பவர்களையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது. ஏன் நீதித்துறையில் உள்ள கண்ணியமானவர்களையும் கண்டிப்பாக இது காயப்படுத்தித்தான் இருக்கும். இருக்க வேண்டும்.
விசயத்தைத் தொடர்வோம்...
மேற்படி இராஜகோபாலின் மேல்முறையீட்டு மனுவும் காவல் துறையினரின் மேல் முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வந்த போது தான் இந்த அசிங்கங்கள் அரங்கேரத்தொடங்கின.
ஆம்!... இந்த இரு மனுக்களும் முதலில் நீதிபதிகள் டி.முருகேசன், கே.என். பாஷா இருவர் அடங்கிய பென்ஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் இருவரும் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
அதன் பின் மனுக்கள் இரண்டும் நீதிபதிகள் பி.டி. தினகரன், இரகுபதி இருவர் அடங்கிய பென்ஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட மனுக்களை விசாரிக்க மறுத்துவிட்டனர்.
மூன்றாவதாக, மனுக்கள் இரண்டும் நீதிபதிகள் டி.முருகேசன், பெரிய கருப்பையா இருவர் அடங்கிய பென்ஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு நீதிபதிகளும் சொன்ன வார்த்தைகள் இந்திய நீதித்துறையின் ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொரிக்கப்படவேண்டியவை.
அந்த பொன்மொழிகளை நீங்களும் பாருங்கள்...
“இந்த வழக்கை விசாரிக்க நாங்கள் முன்வந்தோம். ஆனால், எங்களுக்கு பல வழிகளில் மிரட்டல் கடிதம் வருகின்றது. இதில் அவதூராகக் கருத்துக்களை கூறியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் எந்த நீதிபதிகளும் இந்த வழக்கை விசாரிக்க முன்வரமாட்டார்கள்.
எனவே, இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இதை வேறு நீதிபதிகள் விசாரணைக்கு அனுப்ப தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கின்றோம்”.... என்று அந்த நீதிபதிகள்! தங்கள் திருவாய் மலர்ந்துள்ளார்கள்.
எனக்கு மேற்படி நீதிபதிகளின் கூற்றைப்படித்த பின் மண்டையைபோட்டுக் குடையும் கேள்விகள்,
- இராஜகோபாலின் வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்து, இராஜகோபாலை கைது செய்த இன்ஸ்பெக்டர், வழக்கு விசாரணைக்கு துணையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏனைய காவலர்கள் இவர்களுக்கு குடும்பம் ஏதும் இல்லாமல் இருந்திருக்குமோ?...
- வழக்கை நடத்திய அரசு வழக்குரைஞரும், சாட்சி சொன்ன சாட்சிகள், வழக்கை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை வழங்கிய செசன்ஸ் நீதிபதி இவர்களுக்கெல்லாம் குடும்பம் குட்டி இருந்திருக்காதோ?...
- இராஜகோபாலை ஜெயிலில் வைத்து கண்காணித்த சிறை அதிகாரிகளுக்கு கூட குடும்பம் இருந்திருக்காதோ?
- ஒருவேளை குடும்பம் இருந்து அவர்களுக்கு இராணுவம் முழு நேரமும் பாதுகாப்பு கொடுத்து இருக்குமோ?... இருக்கலாம், இருக்கலாம்.
- ஆமா இராஜகோபால் என்ன அரசாங்கமா?...அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியா?... இவர்வளை விசாரணையை சுதந்திரமாக விசாரிக்க விடாமல் தடைசெய்து விட....
- அடடா வக்கில் தொழிலை தியாகம் செய்து விட்டு இந்த பணிக்கு வந்துவிட்டார்களாம் தியாகிகள்...
- இவர்களுக்கு இந்த வழக்கை விசாரிக்க மனமில்லை... சரி ஒத்துக்கொள்வோம். வரும் நீதிபதிகள் எல்லாம் இந்த வழக்கை விசாரிக்க மனமில்லை என்றால் இந்த வழக்கை யார் விசாரிப்பதாம்?!...
- வழக்கை விசாரிக்க சத்தியற்றவர்கள் எல்லாம் நீதிபதிகள் பதவியில் அவசியம் தானா?!
- வீட்டிற்கும் தனக்கும் போலீஸ் காவலுடனேயே அலையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளே வழக்கை விசாரிக்க பயந்து நடுங்கும் போது எந்த காவல் துறை அதிகாரி வழக்கை விசாரிக்க முன் வருவார், எந்த பொது ஜனம் சாட்சி சொல்ல முன் வருவார், எந்த அரசு வழக்கறிஞர் வழக்கை விசாரிக்க வருவார். எந்த கீழ் நீதிமன்ற நீதிபதி வழக்கை விசாரிப்பார். யார் இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பளிப்பார். ஓ...இவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு எதற்கு?! இவர்கள் என்ன மனிதர்களா என்று நினைக்கின்றனரோ உயர்நீதி மன்ற நீதிபதிகள்?!... நினைத்தாலும் நினைப்பார்கள்.
துணிவுள்ளம் கொண்ட நேர்மையான நீதிபதிகள் மன்னிப்பார்களாக.

